என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் விளையாட்டு இன்று தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் பனிப்பெண்களைக் கற்பழிக்க முயன்ற வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. தொடர்ச்சியாக 21-ந்தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பிரேசில் வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நகரில் அந்தந்த நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் வீரர்கள் தங்கியிருந்தனர். அங்கு பனிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொராக்கோ நாட்டின் 22 வயதான குத்துச் சண்டை வீரர் ஹசன் சாடா இரண்டு பனிப்பெண்களை கற்பழிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.

    ஆனால், இரண்டு பெண்களையும் வீரர் தாக்கியதால் போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று மற்றொரு செய்தி கூறுகிறது. ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் போதுமான வசதி செய்து தரப்படவில்லை என்று வீரர்களின் குற்றச்சாட்டும் தொடர்கிறது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரட்டை இலக்க பதக்கத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரட்டை இலக்கத்தை தொட்டது கிடையாது. அதிக பட்சமாக லண்டனில் (2012) நடந்த ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கம் பெற்று இருந்தது.

    ரியோ ஒலிம்பிக் 10-க்கும் அதிகமான பதக்கத்தை கைப்பற்ற இரட்டை இலக்கத்தை தொடும் ஆர்வத்தில் உள்ளது. அதற்காக இந்திய வீரர், வீராங்கனைகள் கடுமையாக போராடுவார்கள்.


    இந்திய அணி வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, ஆக்கி, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென் னிஸ் மல்யுத்தம், பளு தூக்கு தல் ஆகிய 15 விளையாட்டில் கலந்து கொள்வது 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 56 பேர் வீராங்கனைகள் ஆவார்கள்.

    துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை, பேட்மின்டன், ஆகிய போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    துப்பாக்கி சுடுதலில் ஜிதுராய் (10 மீட்டர் ஏர்பிஸ்டல்) 50 மீட்டர் பிஸ்டல்), அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர்ரைபிள்) மற்றும் ஹீயா சிந்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 25 மீட்டர் பிஸ்டல் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பேட்மின்டன் போட்டியில் சாய்னா நேவால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அவர் ரியோ ஒலிம்பிக்கிலும் பதக்கம் கைப்பற்றி முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த பிரிவில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது. இதே போல வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் பதக்க வாய்ப்பில் உள்ளார். சமீபத்தில் அவர் உலக சாதனையை சமன் செய்து இருந்தார். இதனால் அவரும் முத்திரை பதிக்கலாம்.

    65 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ் வர்த்தும் பதக்க வாய்ப்பில் உள்ளார். லண்டன் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற ஓவா இந்த முறை வெள்ளிப் பதக்கம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    இதேபோல் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் ஹிவதாபா (பாந்தம் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் யாதவ் (மிடில் வெயிட்) ஆகியோரும் பதக்க வாய்ப்பில் உள்ளவர்கள் ஆவார்கள்.

    இந்திய ஆக்கி அணி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மிகப் பெரிய அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனால் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கியில் பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் ஆக்கி அணி பதக்கம் வென்று இருந்தது.

    ரியோ ஒலிம்பிக்கில் திறமையான இந்தியர்கள் பங்கேற்பதால் இந்த முறை இரட்டை இலக்க பதக்கம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

    31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று தொடங்குகிறது. இதில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் விளையாட்டு அரங்குகளுக்கு ஒலிம்பிக் பார்க் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மரக்கானா மைதானத்தில் தொடக்க விழா, நிறைவு விழா நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் தடகள போட்டிகள் மற்றும் கால்பந்து போட்டிகள் நடக்கிறது. கால்பந்து போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி மரக்கானா மைதானத்தில் நடக்கிறது.

    சம்போடிரோமோ மைதானத்தில் வில் வித்தைகள், யூத் ஏரினாவில் கூடைப்பந்து, பீச் வாலிபால் அரினாவில் பீச் வாலிபால் போட்டிகள், ஒலிம்பிக் ஆக்கி சென்டரில் ஆண்கள், பெண்களுக்கான ஆக்கி போட்டிகள் டியோடோரோ மைதானத்தில் மார்டன் பென்டாத்லான், ரக்பி போட்டிகள் நடக்கிறது.

    மேலும் ரியோ ஒலிம்பிக் அரினா, ஒலிம்பிக் டென்னிஸ் சென்டர், அக்குவாடிக்ஸ் மைதானம், கோஸ்ட் கோர்ஸ், பியூட்சர் அரினா, போர்ட் கோபாகபானா, ரியோ சென்டிரோ, மரக்கானா ஜின்கோ ஆகிய இடங்களிலும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது.

    ரியோ ஒலிம்பிக்கில் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் (அர்ஜென்டினா) மோதுகிறார்.
    ரியோ டி ஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக்கில் டென்னிசில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் (அர்ஜென்டினா) மோதுகிறார்.

    கடந்த ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சின் பதக்க கனவை சிதைத்தவர் டெல் போட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் விக்டர் டிரோக்கியை எதிர்கொள்கிறார். பெண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், டாரியா காவ்ரிலோவாவை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ரோகன் போபண்ணா ஜோடி, போலந்தின் லுகாஸ் குபோத்-மார்சின் மாட்கவ்ஸ்கி இணையுடன் மோதுகிறது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-பிராத்தனா தோம்ப்ரே ஜோடி, சீனாவின் சூய் பெங்- சூய் ஷாங் இணையை எதிர்கொள்கிறது. டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது.
    2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால்-சாப்ட்பால், மலையேற்றம், அலைச்சறுக்குதல், கராத்தே, ஸ்கேட்டிங் ஆகிய 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.
    ரியோடிஜெனீரோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படுகிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பேஸ்பால், பெண்களுக்கான சாப்ட்பால், மலையேற்றம், அலைச்சறுக்குதல், கராத்தே, ஸ்கேட்டிங் ஆகிய 5 போட்டிகளை புதிதாக சேர்க்க வேண்டும் என்று டோக்கியோ போட்டி அமைப்பு குழுவினர் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு சிபாரிசு செய்து இருந்தனர்.

    பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில், டோக்கியோ போட்டி அமைப்பு குழுவினர் சிபாரிசு செய்து இருந்த கராத்தே உள்ளிட்ட 5 விளையாட்டுகளையும் சேர்க்க அனுமதி அளித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. வழக்கம் போல் நடைபெறும் 28 விளையாட்டு போட்டிகளுடன் இந்த புதிய 5 போட்டிகளும் சேர்த்து நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

    இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் கருத்து தெரிவிக்கையில், ‘புதிய விளையாட்டுகளை சேர்ப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு மேலும் பல இளம் வீரர்-வீராங்கனைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முடிவு சிறப்புக்குரியது’ என்றார்.

    புதிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளும், வீரர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கின்றனர். ‘அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கராத்தே இடம் பெறுவதை இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாராஜன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    ‘ஒலிம்பிக் போட்டியில் கராத்தேவை சேர்க்க தீர்மானித்து இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இது இந்திய கராத்தேவுக்கு மிகுந்த ஊக்கமும், மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தியாகும். இதன் மூலம் வருங்காலத்தில் லட்சக்கணக்கான இந்திய கராத்தே வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வீணாகாமல் தடுக்கப்படும். ஆர்வமிக்க இந்திய கராத்தே வீரர்கள் விரைவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். ஒலிம்பிக் போட்டியில் கராத்தே இடம் பெற இடைவிடாது முயற்சி மேற்கொண்ட உலக கராத்தே பெடரேஷன் தலைவர் அன்டோனியா எஸ்பினோஸ்க்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
    ஒலிம்பிக் கிராமத்தில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது.
    ரியோடிஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகி ஒருவரின் லேப்-டாப் மற்றும் வீரர்களின் சீருடைகள் சில தினங்களுக்கு முன்பு மாயமானது.

    இந்த நிலையில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது. இதனை டென்மார்க் அணியின் தலைமை நிர்வாகி மொர்டென் தெரிவித்துள்ளார்.

    ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களின் உடமைக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
    ரியோ டி ஜெனீரோ :

    ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக இன்று தொடங்கினாலும், கால்பந்து போட்டிகள் இரண்டு நாளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பெண்கள் கால்பந்து பிரிவில் 12 அணிகள் பங்கேற்று அவை இ, எப், ஜி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    ‘இ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போட்டியை நடத்தும் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும், சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. ‘எப்’ பிரிவில் ஜெர்மனி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிம்பாப்வேயையும், கனடா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டங்களில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் வென்றன.
    ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது.
    ரியோ டி ஜெனீரோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

    தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.

    தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது யார் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தீபத்தை ஏற்றும் கவுரவத்தை வழங்க போட்டி அமைப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் தனது பெயரை பயன்படுத்தும் முழு உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு வழங்கியுள்ள பீலே, அந்த நிறுவனம் அனுமதித்தால் நிச்சயம் தீபத்தை ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். என்றாலும் அவர் தான் தீபத்தை கடைசியாக ஏந்தி வந்து ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் அணிகளின் அணிவகுப்பாகும். 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக அணி வகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்குகிறார். அவர் நமது தேசிய கொடியை ஏந்தி செல்வார்.

    ஒலிம்பிக் தாயகமான கிரீஸ், அணிவகுப்பில் முதல் நாடாக செல்லும். அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி ஒவ்வொரு அணியாக வீறுநடை போடும். இந்த பட்டியலில் இந்தியா 95-வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கலந்து கொள்ளும் 10 பேர் கொண்ட அகதிகள் அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் வலம் வரும். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசி நாடாக செல்லும். அதற்கு முன்பாக அகதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டு களிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று தெரிகிறது.

    பிரேசில் நேரப்படி தொடக்க விழா இரவு 8 மணிக்கு தொடங்கினாலும், நமக்கும் அவர்களுக்கும் இடையே 81/2 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி பார்த்தால் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தான் தொடங்கும். தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் கொண்டாட்டத்தில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் வழக்கம் போல் அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி இருக்கும். அமெரிக்கா 292 பெண்கள் உள்பட 554 பேருடனும், சீனா 413 பேருடனும் ரியோவுக்கு படையெடுத்துள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி 465 பேரை களம் இறக்குகிறது.

    இந்த முறை இந்தியா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் கிடைத்தன.

    இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையில் இந்தியா செஞ்சுரி அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரட்டை இலக்கு பதக்க எண்ணிக்கையை தொடுவதே இந்தியாவின் லட்சியமாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஆக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    ஒலிம்பிக் போட்டியையட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 8 பதக்கம் கிடைக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 8 பதக்கம் கிடைக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

    உலகளாவிய நிதி நிறுவனமான ‘கோல்டு சாச்’ ஒலிம்பிக்கும், பொருளாதாரமும் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக்கில் எவ்வளவு பதக்கம் பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 8 பதக்கம் கிடைக்கும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கம் கிடைக்கும் என்று இதே நிறுவனம் கணித்து இருந்தது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்று இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி நிறுவனம் ஒன்று ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கம் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தது. கோல்டுமேன் நிறுவனம் 8 பதக்கம் கிடைக்கும் என்று கணித்து இருக்கிறது.

    இந்த நிறுவனம் ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு 45 தங்கம் உள்பட 106 பதக்கமும், சீனாவுக்கு 36 தங்கம் உள்பட 89 பதக்கமும் கிடைக்கும் என்றும் கணித்து உள்ளது.
    ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்று இருந்த இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    பிரேசிலில் நாளை தொடங்கும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங் தகுதி பெற்று இருந்தார். கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த இந்திய கிராண்ட்பிரி தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தரம்பிர்சிங் 20.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    அரியானாவை சேர்ந்த 27 வயதான தரம்பிர்சிங்கிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியினர் (நாடா) ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் நேற்று முன்தினம் பிரேசிலுக்கு புறப்பட்டு செல்ல இருந்த தரம்பிர்சிங்குக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் பிரேசில் செல்லவில்லை. ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒருநாளே இருக்கும் நிலையில் மேலும் ஒரு இந்திய வீரர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தரம்பிர்சிங்கின் ‘பி’ மாதிரி சோதனை முடிவும் தோல்வி அடைந்தால் அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

    2012-ம் ஆண்டில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற தரம்பிர்சிங் போட்டி முடிந்ததும் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படாமல் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தரம்பிர்சிங் மீண்டும் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருப்பதால் அவருக்கு 8 ஆண்டு காலம் வரை தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

    31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 118 வீரர்-வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி 15 விளையாட்டுகளில் களம் காணுகிறது.

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மிகப்பெரிய இந்திய அணி இது தான். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்கி அணிவகுப்பில் கொடியேந்தி செல்கிறார். கடந்த (2012) ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 83 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முந்தைய போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது. அதனை விட இந்த முறை இந்திய அணி அதிக பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தேசிய கொடியேற்றுதல் மற்றும் இந்திய அணிக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒலிம்பிக் கிராமத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

    வில்வித்தை :

    ஆண்கள்: அதானு தாஸ் (ரிகர்வ் தனிநபர் பிரிவு).

    பெண்கள்: தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி (ரிகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு).

    தடகளம் :

    ஆண்கள்: முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர் ஓட்டம்), அங்கித் ஷர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள்ஜம்ப்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), தோனாகல் கோபி, கேதா ராம், நிதேந்திர சிங் ராவத் (மூவரும் மாரத்தான்), கணபதி, மனிஷ்சிங், குர்மீத்சிங் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), சந்தீப் குமார், மனிஷ் சிங் (50 கிலோ மீட்டர் நடைபந்தயம்), முகமது அனாஸ், தருண், குன்கு முகமது, ஆரோக்ய ராஜீவ், மோகன்குமார், லலித் மாத்தூர் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    பெண்கள்: டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா ஷெரோன் (400 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்), லலிதா பாபர், சுதாசிங் (இருவரும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா அன்டில் (வட்டு எறிதல்), ஜெய்ஷா, கவிதா ராவுத் (இருவரும் மாரத்தான்), குஷ்பிர் கவுர், சப்னா பூனியா (இருவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அஸ்வினி அகுன்ஜி, தேபஸ்ரீ மஜூம்தார், ஜிஸ்னா மேத்யூ, பூவம்மா, நிர்மலா ஷெரோன், அனில்டா தாமஸ் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    பேட்மிண்டன் :

    ஸ்ரீகாந்த் (ஆண்கள் ஒற்றையர்), மனு அட்ரி-சுமித் ரெட்டி (ஆண்கள் இரட்டையர்), சாய்னா நேவால், பி.வி. சிந்து (பெண்கள் ஒற்றையர்), ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா (பெண்கள் இரட்டையர்).

    குத்துச்சண்டை :
     
    ஆண்கள்: ஷிவதபா (பாந்தம் வெயிட் பிரிவு), மனோஜ்குமார் (லைட் வெல்டர் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் (மிடில் வெயிட்).

    கோல்ப் :

    ஆண்கள்: அனிர்பன் லஹிரி, ஷிவ் சவ்ராசியா. பெண்கள்: அதிதி அசோக்.

    ஜிம்னாஸ்டிக்ஸ் :


    பெண்கள்: திபா கர்மாகர் (ஆர்டிஸ்டிக் தனிநபர் ஆல்-ரவுண்ட் பிரிவு).

    ஜூடோ :

    ஆண்கள்: அவ்தார்சிங் (90 கிலோ உடல் எடைப்பிரிவு).

    துடுப்பு படகு :

    ஆண்கள்: டட்டு பாபன் போகனல் (சிங்கிள் ஸ்கல்ஸ்).

    துப்பாக்கி சுடுதல் :

    ஆண்கள்: அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீட்டர் பிஸ்டல்), ககன் நரங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஜிது ராய் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல்), செயின்சிங் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), குர்பிரீத்சிங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய் (இருவரும் டிராப்), மைராஜ் அகமது கான் (ஸ்கீட்).

    பெண்கள்: அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் (இருவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்).

    நீச்சல் :

    ஆண்கள்: சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), பெண்கள்: ஷிவானி கட்டாரியா (200 மீட்டர் பிரீஸ்டைல்).

    டேபிள் டென்னிஸ் :

    சரத்கமல், சவுமியாஜித் கோஷ் (இருவரும் ஆண்கள் ஒற்றையர்), மவுமா தாஸ், மானிகா பத்ரா (இருவரும் பெண்கள் ஒற்றையர்).

    டென்னிஸ் :

    ரோகன் போபண்னா- லியாண்டர் பெயஸ் (ஆண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-பிராத்தனா தோம்ப்ரே (பெண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-ரோகன் போபண்ணா (கலப்பு இரட்டையர்).

    பளுதூக்குதல் :

    ஆண்கள்: சதீஷ்குமார் (77 கிலோ பிரிவு), பெண்கள்: மீராபாய் சானு (48 கிலோ பிரிவு).

    மல்யுத்தம் :

    பிரீஸ்டைல் ஆண்கள்: சந்தீப் தோமர் (57 கிலோ பிரிவு), யோகேஷ்வர் தத் (65 கிலோ பிரிவு), நார்சிங் யாதவ் (74 கிலோ பிரிவு), கிரீகோ ரோமன் ஆண்கள்: ரவிந்தர் காத்ரி (85 கிலோ பிரிவு), ஹர்தீப்சிங் (98 கிலோ பிரிவு).

    பிரீஸ்டைல் பெண்கள்: வினேஷ் போகத் (48 கிலோ பிரிவு), பபிதா குமாரி (53 கிலோ பிரிவு), சாக்ஷி மாலிக் (58 கிலோ பிரிவு).

    ஆக்கி :

    ஆண்கள் அணி: ஸ்ரீஜேஷ் (கேப்டன் மற்றும் கோல்கீப்பர்), சுரேந்தர்குமார், டேனிஷ் முஜ்தபா, ரகுநாத், ஆகாஷ்தீப்சிங், சிங்லென்சனாசிங், ஹர்மன்பிரீத்சிங், கோதாஜித்சிங், மன்பிரீத்சிங், ரமன்தீப்சிங், ரூபிந்தர்பால்சிங், சர்தார்சிங், எஸ்.வி.சுனில், நிகின் திம்மையா, உத்தப்பா, தேவிந்தர் வால்மிகி.

    பெண்கள் அணி: சுசிலா சானு (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா தாகூர், நமிதா தோப்போ, சுனிதா லக்ரா, லிலிமா மின்ஸ், ரேணுகா யாதவ், நிக்கி பிராத்தன், மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், அனுராதா தேவி, பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, பிரீத்தி துபேய், ராணி ராம்பால்.
    வெளிநாட்டில் போக்கிமோன் கோ விளையாடிய ஜப்பான் ஜிம்னாஸ்டிக் வீரர் யுசிமுராவுக்கு, 3.3 லட்சம் ரூபாய் மொபைல் கட்டணமாக வந்துள்ளது.
    ரியோ:

    ஜப்பானை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் யுசிமுரா. 27 வயதான இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக, கடந்த மாதம் யுசிமுரா பிரேசில் சென்றார். அவர் பிரேசிலிலும், தன்னுடைய ஜப்பான் மொபைல் நம்பரையே பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக உலகத்தையே கலக்கிவரும், போக்கிமோன் கோ விளையாட்டையும் மொபைலில் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன், கடந்த மாதத்திற்கான மொபைல் பில்லை, ஜப்பான் நிறுவனம் யுசிமுராவிற்கு அனுப்பியுள்ளது. பில்லை பார்த்த யுசிமுரா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். கடந்த மாத பில் மட்டும் 3,700 பவுண்ட் (50 ஆயிரம் யென்) என வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 3.3 லட்சம் ரூபாய் ஆகும்.

    ஆனால், ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள யுசிமுராவின் மொபைல் பில் தொகையை மொத்தமாக வசூலிக்காமல், தினமும் 22 பவுண்ட் என்ற விகிதத்தில் செலுத்தலாம் என சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×