என் மலர்tooltip icon

    செய்திகள்

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: கராத்தே, அலைச்சறுக்குதல் உள்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு
    X

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: கராத்தே, அலைச்சறுக்குதல் உள்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு

    2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால்-சாப்ட்பால், மலையேற்றம், அலைச்சறுக்குதல், கராத்தே, ஸ்கேட்டிங் ஆகிய 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.
    ரியோடிஜெனீரோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படுகிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பேஸ்பால், பெண்களுக்கான சாப்ட்பால், மலையேற்றம், அலைச்சறுக்குதல், கராத்தே, ஸ்கேட்டிங் ஆகிய 5 போட்டிகளை புதிதாக சேர்க்க வேண்டும் என்று டோக்கியோ போட்டி அமைப்பு குழுவினர் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு சிபாரிசு செய்து இருந்தனர்.

    பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில், டோக்கியோ போட்டி அமைப்பு குழுவினர் சிபாரிசு செய்து இருந்த கராத்தே உள்ளிட்ட 5 விளையாட்டுகளையும் சேர்க்க அனுமதி அளித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. வழக்கம் போல் நடைபெறும் 28 விளையாட்டு போட்டிகளுடன் இந்த புதிய 5 போட்டிகளும் சேர்த்து நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

    இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் கருத்து தெரிவிக்கையில், ‘புதிய விளையாட்டுகளை சேர்ப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு மேலும் பல இளம் வீரர்-வீராங்கனைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முடிவு சிறப்புக்குரியது’ என்றார்.

    புதிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளும், வீரர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கின்றனர். ‘அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கராத்தே இடம் பெறுவதை இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாராஜன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    ‘ஒலிம்பிக் போட்டியில் கராத்தேவை சேர்க்க தீர்மானித்து இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இது இந்திய கராத்தேவுக்கு மிகுந்த ஊக்கமும், மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தியாகும். இதன் மூலம் வருங்காலத்தில் லட்சக்கணக்கான இந்திய கராத்தே வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வீணாகாமல் தடுக்கப்படும். ஆர்வமிக்க இந்திய கராத்தே வீரர்கள் விரைவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். ஒலிம்பிக் போட்டியில் கராத்தே இடம் பெற இடைவிடாது முயற்சி மேற்கொண்ட உலக கராத்தே பெடரேஷன் தலைவர் அன்டோனியா எஸ்பினோஸ்க்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×