என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND:  குழந்தைகளின் உயிரை குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்து - ஸ்ரீசன் பார்மா உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசு
    X

    2025 REWIND: குழந்தைகளின் உயிரை குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்து - ஸ்ரீசன் பார்மா உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசு

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் 'கோல்ட்ரிப் இருமல்' (Coldrif Cough Syrup) மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    அந்த மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியது.

    இதனைத் தொடர்ந்து 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

    அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இதுதொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (Coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரித்த இந்த மருந்து, குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானதால், மருந்துப் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும் (WHO) கவலை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×