என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: 'மதராஸி கேம்ப்' இடிப்பு.. டெல்லியில் நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட 370 தமிழ் குடும்பங்கள்
- சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர்.
- 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.
டெல்லியில் தமிழர்கள் குடும்பங்களாய் வாழ்ந்து வந்த மதராஸி கேம்ப் இடிப்பு சம்பவத்தை தமிழ் மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த 350 தமிழ் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆம்.. மதராஸி கேம்ப் இடிப்பு என்பது அங்கு பல தசாப்தங்களாக வசித்து வந்த தமிழ் வம்சாவளி மக்களின் வாழ்வாதாரத்தைப் கடுமையாக பாதித்தது.
தெற்கு டெல்லியின் ஜாங்புரா (Jangpura) பகுதியில், 'பாரபுல்லா' வடிகால் அருகே இந்த மதராஸி கேம்ப் அமைந்திருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் அப்பகுதியில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், பாரபுல்லா வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த குடியிருப்புகள் வடிகால் பாதையை அடைப்பதாகவும், இதனால் பருவமழைக் காலங்களில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது.
மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக, வடிகால் ஓரங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டியது அவசியம் என பொதுப்பணித்துறை (PWD) வாதிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கடந்த ஜூன் 1ம் தேதி அன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்புப் பணி தொடங்கியது.
50-60 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடமைகளைச் சேகரிக்கக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதையும் கண்டுக்கொள்ளாமல், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, இடிக்கப்பட்ட 370 குடும்பங்களில், 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது. அவர்களுக்கு டெல்லியின் ஓரத்தில் உள்ள நரேலா (Narela) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.
மதராஸி கேம்பிலிருந்து நரேலா சுமார் 40 - 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மக்களின் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், அந்த வீடுகள் வசிக்கத் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹8,000 நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டார்.
டெல்லியில் உள்ள தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் டெல்லி தமிழ் சங்கத்தினர் மூலம் இந்த உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன. அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளில் தடையின்றி சேர்க்கை பெறவும் தமிழக அரசு வலியுறுத்தியது.
இதற்கிடையே, செப்டம்பர் 2024 முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மாற்று இடங்களை வழங்காதது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், 370 குடும்பங்களில் 215 குடும்பங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் கூறியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், விடுபட்ட தகுதியான குடும்பங்களையும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரும்பாலான குடும்பங்கள் நரேலாவிற்கு மாற்றப்பட்டாலும், தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்ட பல குடும்பங்கள் இப்போதும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.






