என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: கடலூர் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - அவசரமா? அலட்சியமா?
- ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் மோதியது.
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடந்த ஜூலை 8-ந்தேதி ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரெயில் இழுத்துச் சென்றது.
ரெயில் பள்ளி வேன் மீது மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியானார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
நிமிலேஷ் (12), சாருமதி (16), செழியன் (15) என 3 மாணவர்கள் பலியாகினர். சாருமதி மற்றும் செழியன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (அக்கா-தம்பி), மேலும் நிமிலேஷ் மற்றொரு மாணவர் உயிரிழந்தார்.
விஸ்வேஷ் (16) மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் (47) படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கவனக்குறைவாக இருந்த கேட் கீப்பர், ரெயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த விபத்திற்கு கேட் கீப்பர் அலட்சியம், ரெயில்வே கேட் திறந்திருந்தது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் தூங்கிக்கொண்டிருந்ததால் கேட்டை மூடத் தவறியதே விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில், கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததுடன், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பள்ளி வேன் ரெயில்வே கேட்டை கடக்க முயலும்பொழுது கேட் போடாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது, ரெயில்வே தண்டனைச் சட்டம் பிரிவு 105,106,125(a),125,(b), பிஎன்எஸ் 151 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரெயில்வே பணியிடை நீக்கம் செய்தது.
விபத்து எதிரொலியாக, தமிழ் பேசத் தெரிந்த ஒருவரைக் கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தராஜ் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கேட் மூடப்படுவதை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த ரெயில்வே அமைச்சர் உத்தரவிட்டார்.
கேட் கீப்பரின் அலட்சியத்தாலும், வேன் டிரைவரின் அவசரத்தினாலும் நிகழ்ந்த விபத்தில் சிதைந்துபோனது மாணவர்களும், அவர்களை பெற்றவர்களின் கனவும், நம்பிக்கையும் தான்.






