என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சரை விமர்சிக்காத விஜய்: த.வெ.க.- என்.ஆர்.காங். கூட்டணிக்கு அச்சாரமா?
- புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று விஜய் குற்றம்சாட்டினார்.
- த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் மத்திய பா.ஜ.க. அரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் என்.ஆர்.காங்கிரசையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ, த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை விஜய் விமர்சனம் செய்தார். மத்திய பா.ஜ.க. அரசு மாநில அந்தஸ்து தரவில்லை, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சு உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் ஏற்கனவே நட்புணர்வு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ரங்கசாமி பேசினார். நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
இதனால் ரங்கசாமி வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் விமர்சிக்காதது இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதனை அரசியல் நோக்கர்கள் என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க. கூட்டணிக்கு அச்சாரமாக கருதுகின்றனர்.






