என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம்- ஏற்பாடுகளை பார்வையிட்ட புஸ்சி ஆனந்த்
- 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
- தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இதனால் புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.
முன்னதாக விஜய் பிரச்சார வாகனம் இன்று இரவே புதுச்சேரிக்கு வந்து சேர்கிறது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.
பொதுக்கூட்ட மைதானம் டிட்வா புயல் மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. பொதுக்கூட்டத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது.
உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை கடந்த 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று செய்து வருகிறார்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கூடுதலாக 2 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் பங்கேற்போருக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் இன்று மாலை முதல் த.வெ.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நிர்வாகிக்கு 5 பாஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதோடு கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தை 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று முதல் போலீசார் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரை பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுகூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்திற்கு நடந்தே வர வேண்டும்.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. கூட்டம் காலையில் நடப்பதால் இந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்துக்கு வரும் பாதையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அந்த பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.






