என் மலர்
புதுச்சேரி

காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி புதுச்சேரி வருகிறார்- நாராயணசாமி தகவல்
- மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியுடையதாக இருக்கும்.
- மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் தொடங்கிய பாதயாத்திரையை கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடங்கி வைத்தார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு தெருக்களிலும் பாதயாத்திரையாக சென்று மக்களைச் சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களுடன் கூடிய முக கவசங்களை அணிந்து வந்தனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி உட்பட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையின் முடிவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நடை பயணம் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்துக்கானது. 4½ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியில் ஊழலைத் தவிர வேறொன்றும் நடைபெறவில்லை. 390 ரெஸ்டோபார்களை திறந்து புதுச்சேரி மக்களின் நிம்மதியைக் குலைத்துள்ளனர்.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியுடையதாக இருக்கும். இதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம். 2026-ல் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறும். ராகுல் காந்தியை சந்தித்து பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டோம். கண்டிப்பாக வருவதாக கூறியுள்ளார். அவர் வரும் தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார்.






