என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சூடுபிடித்த தேர்தல் களம்: என்.ஆர்.காங்.-பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் பாதயாத்திரை
    X

    புதுச்சேரியில் சூடுபிடித்த தேர்தல் களம்: என்.ஆர்.காங்.-பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் பாதயாத்திரை

    • ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவுகளில் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொங்கல் தொகுப்புடன் தமிழகம்போல பரிசுத் தொகை வழங்கவும் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. காலியாக உள்ள அரசின் அனைத்து பணியிடங்களையும் நிரப்பும் வகையில் அரசு தேர்வு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு ஆணையம் மூலம் 10-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களுக்கு பணிக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 பேர் கொண்ட 2-வது ஐ.ஆர்.பி.என். படை அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜீவ்காந்தி சிலை முதல், இந்திராகாந்தி சிலை வரை சுமார் ரூ.600 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி புதுச்சேரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை கேட்டுள்ளனர். இந்த நிதியும் விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

    பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது பல்வேறு திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சூசகமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. முனைப்புடன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். கைநழுவி போன புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க.வும் கால் நுாற்றாண்டாக இல்லாத ஆட்சியை தங்கள் தலைமையில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியை உற்சாகப்படுத்தி உள்ளது. காங்கிரஸ், தி.மு.க.வுக்கு கட்சி தலைமை மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.

    அதோடு ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. மக்களிடம் கூறி வருகின்றனர். சமீபத்தில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை இந்தியா கூட்டணி கையில் எடுத்து அரசுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்து வருகிறது. இதில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இதேபோல ஆளும் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ், தி.மு.க. கூறி வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரசார் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.

    இந்த பாதயாத்திரை 15 நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார். பாத யாத்திரைக்கான கையேடையும் வெளியிட்டுள்ளார். ஆட்சியின் அவலங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புதுச்சேரி தாத்தா என்ற பெயரில் விமர்சனம் செய்யும் வீடியோக்களையும் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. இதற்கான கி.யூ.ஆர். கோடையும் காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ளார்.

    இதன்மூலம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே புதுச்சேரியில் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×