search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளியே பேசுவதை உள்ளே வந்து பேச மாட்டாரா? - மோடிக்கு திவாரி கேள்வி
    X

    "வெளியே" பேசுவதை "உள்ளே" வந்து பேச மாட்டாரா? - மோடிக்கு திவாரி கேள்வி

    • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினத்தன்று மீண்டும் அத்துமீறல் நடந்தது
    • சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே தாக்குதல் நடந்ததில்லை என்றார் திவாரி

    கடந்த டிசம்பர் 13 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட மக்களவையில் அலுவல் நேரத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையின் மைய பகுதிக்கு 2 பேர் குதித்தனர். ஒருவர் எம்.பிக்களை தாண்டி மேசைகள் மீது குதித்தவாறு சபாநாயகர் அருகே செல்ல முயன்றார். தன் உடலில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை குப்பிகளை அங்கு வீசினார். அதிலிருந்து கிளம்பிய மஞ்சள் நிற புகை சில எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. இன்னொரு நபர் கோஷமிட்டவாறே அவையில் அங்கும் இங்கும் ஓடினார்.

    இந்த எதிர்பாராத சம்பவத்தால் அவையிலிருந்த சில எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது நின்றிருந்தாலும், சில எம்.பி.க்கள் துணிச்சலுடன் அந்த இருவரையும் நெருங்கி பிடித்து விரைந்து வந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கோஷமிட்டு கொண்டே வர்ண குப்பிகளை வீசினர். அதிலிருந்தும் வர்ண புகை வெளிக்கிளம்பியது


    அந்த 4 பேரையும் கைது செய்துள்ள புது டெல்லி காவல்துறை இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்தும், இதில் ஈடுபட்டவர்களின் நோக்கம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இச்சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, "எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாத இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; கவலைக்குரியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சி துணை தலைவரான பிரமோத் திவாரி இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதாவது:

    இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்திற்கு உள்ளே மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்த வித பாதுகாப்பு குறைபாடோ அத்துமீறலோ ஏற்பட்டதில்லை என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பிரதமர் வெளியிலிருந்து அறிக்கை விடுகிறார்; ஆனால் அவைக்கு வந்து பேச மறுக்கிறார். அவர் ஏன் அவைக்கு வந்து உறுப்பினர்களிடையே தனது விளக்கத்தை முன்வைக்க மறுக்கிறார்?

    இவ்வாறு திவாரி கூறினார்.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×