என் மலர்
இந்தியா

எத்தனை விக்கெட் என்பதைவிட யார் வென்றார்கள் என்பதே முக்கியம் - போர் விமான இழப்பு பற்றி முப்படைத் தளபதி
- தவறை சரிசெய்து மீண்டும் முயற்சிக்க முடியும். நீங்கள் பயத்தில் உட்காரக்கூடாது.
- பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நான் இரண்டு அனுமானங்களைச் செய்ய முடியும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சில போர் விமானங்கள் இழந்ததை ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, முப்படைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான் அதுகுறித்து பேசியுள்ளார்.
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் 'எதிர்காலப் போர்கள் - போரின் பாணிகள்' என்ற தலைப்பில் ஜெனரல் சவுகான் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், " படைகள் பின்னடைவுகள் அல்லது இழப்புகளால் பாதிக்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். போரில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், உயர்ந்த மன உறுதியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடிவது ஒரு தொழில்முறை ராணுவப் படையின் முக்கிய பண்பு. என்ன தவறு நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், தவறை சரிசெய்து மீண்டும் முயற்சிக்க முடியும். நீங்கள் பயத்தில் உட்காரக்கூடாது.
தற்காலிக இழப்புகள் ராணுவத்தை வலிமையை வெளிப்படுத்துவதில் பாதிக்காது. இதுபோன்ற பின்னடைவுகளை விட இறுதி முடிவு மிக முக்கியமானது. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணி எத்தனை விக்கெட்டுகளை இழக்கிறது என்பது முக்கியமல்ல, இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் முக்கியம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நான் இரண்டு அனுமானங்களைச் செய்ய முடியும். ஒன்று, அவர்கள் நீண்ட தூரத்திலிருந்து ஏவும் ஆயுதங்களை விரைவாக இழக்கிறார்கள்.
இது இன்னும் சிறிது காலம் தொடர்ந்தால், அவர்கள் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று உணர்ந்திருக்கலாம், அதனால்தான் அவர்கள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர்" என்று தெரிவித்தார்.






