என் மலர்
இந்தியா

யார் வேட்பாளர்? மோதலில் ஏ,பி விண்ணப்பத்தை கிழித்து விழுங்கிய சிவசேனா பிரமுகர்!
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.






