என் மலர்
இந்தியா

வக்பு சட்டத்திருத்த விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் 2- வது நாளாக அமளி
- வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர்.
- இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
வக்பு திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் நேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இன்று 2- வது நாளாக காஷ்மீர் சட்டசபை கூடியது. முன்னதாக மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டி.பி.) மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் அமளியால் சபை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாஹித்பாரா சட்டசபையில் இருந்து வெளியேற்றப் பட்டார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்.கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.






