என் மலர்
இந்தியா

வக்பு திருத்த சட்டம்: இடைக்கால தடை தொடரும் - உச்ச நீதிமன்றம்
- நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
- வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்பு கள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தான் 13-ந் தேதி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும். மே 15-ந் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது வக்பு சட்டதிருத்தம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இரு தரப்பும் வருகிற 19-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 20-ந்தேதி இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தின் முந்தைய விதிகளை நிறுத்தி வைக்கக் கோரும் எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.






