என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்காளர் பட்டியல் திருத்தம் சர்ச்சை.. தேர்தல் ஆணையம் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஆர்.ஜே.டி.
    X

    வாக்காளர் பட்டியல் திருத்தம் சர்ச்சை.. தேர்தல் ஆணையம் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஆர்.ஜே.டி.

    • கொடிய சதித்திட்டம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்
    • மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்று கூறினார்.

    வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆர்.ஜே.டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகவுள்ளார்.

    தேர்தல் ஆணையம், ஜூன் 24 அன்று பீகாரில் தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

    நகரமயமாக்கல், புலம்பெயர்தல், புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் போன்றவர்களை கண்டறிய இந்த இந்த திருத்தம் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    ஆனால் ஏற்கனவே ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த உத்தரவு இளம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையில் இருந்து பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது பாஜக-விற்கு சாதகம் என்றும் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதை கொடிய சதித்திட்டம் என்று விமர்சித்தார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்றும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.

    ஆர்ஜேடி முக்கிய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த திருத்தப் பணி ஏன் பீகாரில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த திருத்தப் பணியை ஆதரித்து, எதிர்க்கட்சிகள் தோல்விக்கு சாக்குப்போக்கு தேடுவதாகக் குற்றம் சாட்டியது.

    தேர்தல் ஆணையம், பீகாரில் திருத்தப் பணியின் முதல் கட்டம் சீராக முடிவடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை ஆளும் கட்சிக்கு சாதகமாக கையாளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 25 வரை ஆவணங்களை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×