என் மலர்
இந்தியா

அட்டகாசம் செய்த புலியை பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளை கூண்டில் அடைத்த கிராம மக்கள்!
- விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
- 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் தள்ளி பூட்டினர்.
கர்நாடகாவில் புலியைப் பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குண்டல்பேட்டை அருகே பொம்மலப்புரா கிராமம் உள்ளது. ஷமீக் காலமாக கிராமத்தினரின் கால்நடைகளை அங்கு திரியும் புலி, அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்துள்ளது.
புலியைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், வனத்துறையினர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
புலியை பிடிப்பதாக பெயருக்கு ஒரு கூண்டு மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று காலை, விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், வனத்துறையினர் ஆடி அசைந்து தாமதமாக வருவதற்குள் புலி அங்கிருந்து ஓடிவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் வைத்து பூட்டினர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி பூட்டப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.
மேலும் அந்த புலியை பிடிக்கப்படும் வரை தலைமையகத்திற்குத் திரும்ப கூடாது என அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.






