என் மலர்tooltip icon

    இந்தியா

    UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!
    X

    UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!

    • தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
    • 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

    இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

    தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×