என் மலர்
இந்தியா

வக்பு மசோதா சட்டமாவதற்கு முன்பே சொத்துக்களை கையகப்படுத்த உத்தரவிட்ட உ.பி. முதல்வர் - சமாஜ்வாதி புகார்
- ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதா அடுத்தாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சட்டவிரோத வக்பு சொத்துக்களை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில எதிர்க்க்காட்சியான சமாஜ்வாதி கட்சி எம்.பி. கோபால் யாதவ், இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
அதற்குள் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த உத்தரப் பிரதேச முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுவிட்டார்.
இந்த மசோதாவை எதிர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கிறது, நிற்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.






