search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் தேர்தல்- வெங்கையா நாயுடுவுடன் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா சந்திப்பு
    X

    (கோப்பு படம்)

    குடியரசுத் தலைவர் தேர்தல்- வெங்கையா நாயுடுவுடன் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா சந்திப்பு

    • இந்த தேர்தலில் வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
    • எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக யஷ்வந்த் சின்காவின் பெயர் பரிந்துரை.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பழங்குடியின பெண் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க் கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் குடியரசுத் தலைவர் தேர்வு தொடர்பாக பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த குழுவில் 6 மத்திய மந்திரிகள், பாஜக தேசிய செயலாளர்கள் 3 பேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×