என் மலர்
இந்தியா

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் ரத்து?
- மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
- இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பிரதமர் மோடி தனது ரஷியா பயணத்தை ரத்து செய்தார்.
இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரும் ரஷிய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி சஞ்சய் சேத் ரஷியாவில் நடக்கும் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.






