என் மலர்
இந்தியா

காற்றடைத்தபோது வேன் டயர் வெடித்து சிதறியதில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட பஞ்சர் கடைக்காரர்- வீடியோ
- வெடிகுண்டு சத்தம் என நினைத்து அக்கம் பக்கத்தினர் பஞ்சர் கடைக்கு ஓடி வந்தனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோட்டேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அதன் பின்புறம் டயர் பஞ்சர் பார்க்கும் கடை உள்ளது. அங்கு அப்துல் ரஷித் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அவர் வழக்கம் போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வேனில் ஒருவர் வந்தார்.
வேனில் இருந்த மாற்று டயருக்கு பஞ்சர் பார்க்க வேண்டும் என அவரிடம் தெரிவித்தார். அதன்படி அப்துல் ரஷித் பஞ்சர் பார்த்தார். டயருக்கு மேலே அமர்ந்து கொண்டு அவர் காற்றடைத்தார். அப்போது காற்று அதிகமானதால் அழுத்தம் தாங்காமல் டயர் டமார் என்று வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது.
டயரின் மேலே உட்கார்ந்து காற்றடித்து கொண்டிருந்த அப்துல் ரஷித் ஒரு ஆள் உயரத்துக்கு மேலே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு சத்தம் என நினைத்து அக்கம் பக்கத்தினர் பஞ்சர் கடைக்கு ஓடி வந்தனர்.
அப்போது வேனின் அருகே படுகாயத்துடன் அப்துல் ரஷித் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காற்றடைத்தபோது டயர் வெடித்து உயரத்தில் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






