என் மலர்
இந்தியா

மத்திய பிரதேசத்தில் பரிதாபம்: கன்வார் யாத்ரீகர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 4 பேர் பலி
- 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர்.
- விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கன்வார் யாத்திரை என்பது சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் செல்லும் யாத்திரையாகும்.
கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுக்கும் பக்தர்கள் அந்த தண்ணீரை ஒரு கம்பத்தின் இருபுறமும் தொங்கவிடப்பட்ட கொள்கலன்களில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தோள்களில் சுமந்து சென்று தங்கள் உள்ளூர் சிவாலயங்களில் உள்ள சிவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை ஜூலை 11 முதல் 23-ந்தேதி வரை நடந்து வருகிறது.
மத்திய பிரேதச மாநிலம் சிதாவுனா கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர். அவர்கள் நேற்று இரவு குவாலியர் ஷீட்லா மாதா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் யாத்ரீகர்கள் மீது மோதியது. இதில் 4 யாத்ரீகர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் இறந்தார். இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






