என் மலர்
இந்தியா

வயதானவர்களை வலுக்கட்டாயமாக வரவழைப்பதா?- தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
- வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
- முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-
இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.






