என் மலர்
இந்தியா

நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு - பிரதமர் மோடி
- 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
- ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.
பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.
இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,
1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் உறுதி பூண்டு உள்ளது.
அசாமின் 13 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி பாரதம் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
காங்கிரஸ் அசாமை பல தசாப்தங்களாக ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்திரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 6 பாலங்களைக் கட்டினோம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நமது ராணுவம் மிக பலத்துடன் எதிர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் நமது ஆயுதப்படைகளை அவமதித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப் பாட்டில் காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊடுருவல்காரர்கள் உங்கள் நிலத்தை அபகரிக்க பாஜக அனுமதிக்காது. மக்கள் தொகையை மாற்றும் சதியை தடுப்போம்" என்று மோடி பேசினார்.
இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைத்தார்.
அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.






