என் மலர்
இந்தியா

வந்தது அழைப்பு.. ஜி7 மாநாட்டுக்கு கனடா பிரதமர் போன் போட்டு கூப்பிட்டதாக பிரதமர் மோடி ட்வீட்!
- இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
- மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது.
இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.
இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு போன் மூலம் கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.
மக்களுக்கு இடையிலான உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஆர்வங்களால் வழிநடத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது. இந்நிலையில் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு தற்போது அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






