search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு?: தெலுங்கானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு
    X

    மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு?: தெலுங்கானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

    • சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
    • பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

    திருப்பதி:

    மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கா் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்து விட்டது.

    தெலுங்கானா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

    சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

    மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3.26 கோடியாகும். 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.

    ஆளும் பி.ஆா்.எஸ்., முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பி.ஆா்.எஸ். தலைவரும் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

    சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அவரது தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் களமறங்கியுள்ளது.

    பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அளித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஐதராபாத்தில் 9 தொகுதிகளில் களத்தில் இருக்கிறது.

    மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலுங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

    இந்த 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்த தோ்தல்கள் கருதப்படுகிறது. தெலுங்கானாவில் வெற்றி யாருக்கு? என்ற பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

    தெலுங்கானாவில் முதல்முறையாக இந்த தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாதம் 9-ந் தேதி அமலுக்கு வந்தன. அப்போது முதல் நேற்று வரை, ரூ.737 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மதுபானங்கள், தங்கம், இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்படுகின்றன.

    மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீசார் மற்றும் 70 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×