என் மலர்
இந்தியா

பாராளுமன்ற தேர்தல் 2024: பா.ஜ.க.வின் புது சுலோகம் தெரியுமா?
- பாராளுமன்ற தேர்தல் அட்டவணை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் வேட்பாளர்களை அறிவிக்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. சமீபத்தில் நடந்த பா.ஜ.க. தேசியக் குழு கூட்டத்தில் இந்தத் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சமூக வலைதளக் குழுக்களை தீவிரப்படுத்தவும் பா.ஜ.க. அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய சுலோகத்தை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. '3வது முறையும் மோடி ஆட்சி, 400 இடமே நமது இலக்கு' என்ற புதிய சுலோகத்தை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.






