என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி-சந்திரசேகர் இடையே நேரடி டெலிபோன் தொடர்பு உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளது.
- இருவரும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்தே செயல்படுகிறார்கள்.
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகா வழியாக இப்போது தெலுங்கானா மாநிலத்தில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளது. இருவரும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்தே செயல்படுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிப்பதில் இருந்தே இரு கட்சிகளுக்குமான ஒற்றுமையை அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடிக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கும் இடையே நேரடி டெலிபோன் தொடர்பு உள்ளது. பிரதமர் அங்கிருந்து முதல்-மந்திரிக்கு உத்தரவு பிறப்பிப்பார். உடனே அவர் அதனை இங்கு நிறைவேற்றுவார்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை சந்திரசேகர ராவ் ஆதரித்ததில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் போது, அதனை திசை திருப்பும் முயற்சிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஈடுபடும். அவர்கள் உடனே வேறு பிரச்சினையை கிளப்பி சபையின் கவனத்தை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தியாவில் டெல்லி தான் மாசுபட்டநகரம் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான் அதைவிட மோசமான நகரம் ஐதராபாத் என்பதை தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






