search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா
    X

    எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது.
    • அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே பா.ஜனதாவின் மந்திரம்.

    விஜயாப்புரா :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் களத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஜனதா தளம் (எஸ்) பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு வருகிறது. ஆளும் பா.ஜனதா ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை நேற்று தொடங்கியது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று விஜயாப்புராவில் நடந்த கூட்டத்தில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை, ஆட்சி நிர்வாகம், முழுமையான வளர்ச்சி என்றால் அது பா.ஜனதா என்று பொருள். மக்கள் விரோத, ஊழல், கமிஷன், சாதியவாதம், மக்களை பிளவுபடுத்துவது என்றால் அது காங்கிரஸ் என்று பொருள். அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே பா.ஜனதாவின் மந்திரம். பிரதமரின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு 782 கோடி டிஜிட்டல் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் உலக அளவில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு வரை 350 கிலோ மீட்டர் நீளத்திற்கு தான் ஓ.எப்.சி. கேபிள் வயர்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அது தற்போது 2.78 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் மண்டல அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் பா.ஜனதாவோ, அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மையமாககொண்டு செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    முன்னதாக அவர் சமீபத்தில் மரணம் அடைந்த மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமியின் ஆசிரமத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். சிக்பள்ளாப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும், துமகூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்து கொண்டனர்.

    சிக்பள்ளாப்பூரில் பேசிய மேலிட பொறுப்பாளர் அருண்சிங், "கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் என்ன நல்லது செய்துள்ளனர். பி.எப்.ஐ. அமைப்பை மாநிலம் முழுவதும் விஸ்தரித்ததே சித்தராமையா ஆட்சியின் சாதனை ஆகும். அப்போது 32 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். இது தான் காங்கிரசின் சாதனையா?. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் இந்த முறை பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும்" என்றார்.

    Next Story
    ×