என் மலர்
இந்தியா

காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இல்லை- நிதிஷ்குமார் கட்சி அறிவிப்பு
- இந்தியா கூட்டணிகளில் சிக்கல் நீடிக்கும் 3-வது மாநிலம் பீகாராகும்.
- சிவசேனாவுடனும் காங்கிரசுக்கு தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடந்தது. நேற்று முன்தினம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுவரை நடந்த எந்த கூட்டத்திலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவாகவில்லை. அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாத சிக்கல் நீடித்து வருகிறது.
பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை அது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கும் முடிவுக்கும் நிதிஷ்குமார் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். இந்தியா கூட்டணியை உருவாக்கிய அவர் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பீகாரில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடந்தப் போவது இல்லை என்று நிதிஷ்குமார் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் மந்திரியுமான சஞ்சய் குமார்ஷா இது தொடர்பாக கூறியதாவது:-
தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் இருப்பதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தீவிரமாக இருந்ததுதான் காரணம். பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம்.
காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவர்களுக்கு இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்ட பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்துவோம். எங்களிடம் 16 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் நாங்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். ஆனாலும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
16 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை. ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது எங்களின் நிலையை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணிகளில் சிக்கல் நீடிக்கும் 3-வது மாநிலம் பீகாராகும். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், மராட்டியத்தில் சிவசேனாவுடனும் காங்கிரசுக்கு தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உள்ளன.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்று இருந்தது. இதில் பா.ஜனதா 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்திலும், ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி (பா.ஜனதா கூட்டணி) 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.