search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருகிற 24-ந்தேதி கூடுகிறது பாராளுமன்றம்
    X

    வருகிற 24-ந்தேதி கூடுகிறது பாராளுமன்றம்

    • உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
    • ஜூன் 26-ந்தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வுக்கு 240 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும்பான்மை பெறாததால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு 231 இடங்கள் கிடைத்தது.

    நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக கடந்த 9-ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் 71 பேரும் மந்திரிகளாக பதவியேற்றனர். மந்திரிகள் அனைவரும் நேற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்றம் கூடும் தேதி விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. ஜூலை 3-ந்தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை நடக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல், ஜனாதிபதி உரை மற்றும் விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் 3 நாட்கள் எம்.பி.க்கள் பதவி ஏற்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

    வருகிற 27-ந்தேதி பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார் என்று தெரிகிறது. அவர் புதிய அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை தனது உரையில் தெரிவிப்பார்.

    மேல்சபையில் 264-வது கூட்டத்தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை மத்திய மந்திரி கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

    ஜனாதிபதி உரைக்கு பிறகு பிரதமர் மோடி தனது மந்திரிகளை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

    பாராளுமன்ற இருஅவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார்.

    இந்த மக்களவையில் ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுப்பார்கள்.

    இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×