என் மலர்
இந்தியா

புறப்படுவதற்கு முன் 6 வகையான சோதனை.. ஏர் இந்தியாவுக்கு விமான இயக்குநரகம் கறார் உத்தரவு!
- ஜூன் 15 முதல் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு ஆய்வுக்கும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
241 உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, ஜூன் 15 முதல் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆறு வகையான ஆய்வுகளை முடிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன. எரிபொருள் தொட்டிகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் செயல்பாட்டை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
விமான கேபின்களில் உள்ள காற்று கட்டுப்பாட்டு அமைப்பு அதன் செயல்பாட்டிற்காக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இயந்திர கட்டுப்பாட்டு சுவிட்சுகள் உள்ளிட்ட பாகங்களை சரிபார்க்க வேண்டும்.
இயந்திர பாகங்களின் செயல்பாடு மற்றும் எண்ணெய் அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க வேண்டும். ஹைட்ராலிக் அமைப்பின் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விமானத்தின் இயந்திரம் மற்றும் பிற இயந்திர கூறுகளின் ஆய்வு இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். 15 நாட்களுக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உடனடி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அவை தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதுபற்றிய விரிவான தகவல்களை அவ்வப்போது DGCA க்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்து ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு ஆய்வுக்கும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
ஜென்க்ஸ் என்ஜின்கள் பொருத்தப்பட்ட அனைத்து ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானங்களும் இதுபோன்ற அவசர பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உள்ளூர் டிஜிசிஏ அலுவலக அதிகாரிகள் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குவர்.