என் மலர்
இந்தியா

"வக்பு மசோதா வெற்றிக்கு பின் கிறிஸ்தவர்களை குறிவைத்த ஆர்எஸ்எஸ்" - ராகுல் காந்தி எச்சரிக்கை
- காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
- "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்"
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறும்பான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. முதல்வர் ஸ்டாலினும் வழக்குத் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "வக்பு மசோதா முஸ்லிம்களைத் தாக்குகிறது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று நான் கூறியிருந்தேன்.
ஆர்எஸ்எஸ் தனது கவனத்தை கிறிஸ்தவர்கள் மீது திருப்ப அதிக நேரம் எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே - அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமை" பதிவிட்டுள்ளார்.






