என் மலர்
இந்தியா

எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் - எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு அறிவிப்பு
- அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும்.
- இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.
புதுடெல்லி:
ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெ ரிக்க போர் விமானங்கள் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பூமிக்கு அடியில் மிக அழமான இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய சுமார் 14 டன் எடை கொண்ட குண்டுகளை அமெரிக்கா முதன் முதலாக பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. நேற்று அடுத்தடுத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்அவிவ், ஹய்பா, சியோனா நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
ஈரானில் நேற்று பூமியை துளைத்து செல்லும் பங்கர் பஸ்டர் எனப்படும் சக்தி வாய்ந்த 14 குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதனால் ஈரானின் 3 இடங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்து இருக்கிறது.
இதன் காரணமாக போர் பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரான் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மீது நேரடி தாக்குதலை தொடுக்காத ஈரான் அதற்கு பதில் உலகம் முழுவதும் நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
ஈரான் கடல் பகுதியில் ஹார்முஸ் நீரிணை என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது. இது 33 கிலோ மீட்டர் மட்டுமே அகலம் கொண்டது. இந்த கடல் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. இந்த நீரிணைப்பு கடல் பகுதி பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் பகுதியாகும்.
இந்த ஹார்முஸ் நீரிணை பகுதி வழியாகதான் கத்தார், பக்ரைன், ஈராக், அரேபியா, குவைத் உள்பட அரபு நாடுகள் அனைத்தும் தங்களது கச்சா எண்ணெயை உலகின் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக உலகம் முழுக்க நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை இணைப்பு பகுதியை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானால் அங்கு ஏற்படுத்தப்படும் இந்த இடையூறு பல நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் விதமாக மாறி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமான அளவுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். முக்கியமாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இது அடுத்தடுத்து மற்ற பாதிப்புகளையும் உருவாக்கும் என்று கருதுகிறார்கள்.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டையும் உருவாக்க ஈரான் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடும். கச்சா எண்ணெய் கிடைக்காதபட்சத்தில் பல நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரானின் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் தங்கத் தின் விலையும் மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்படுத்தப்படும் தடையை தகர்க்க அமெரிக்க படைகள் முயற்சி செய்தால் மேலும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு மறைமுகமாக அதிக இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஈரான் முடிவு செய்துள்ள ஹார்முஸ் நீரிணை தடை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு தினமும் அந்த நீரிணை பகுதி வழியாக கணிசமான அளவுக்கு கச்சா எண்ணெய் வருகிறது. அதாவது இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் அந்த பகுதி வழியாகத்தான் வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் 9-வது பெரிய நாடாக இருக்கும் ஈரான் மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய்களையும் முடக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணெயை அதிகளவு இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.
எனவேதான் ஈரானின் ஹார்முஸ் நீரிணை தடை நடவடிக்கை இந்தியாவில் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக பெட்ரோல்-டீசல் மற்றும் தங்கம் விலையில் அதிக பாதிப்பை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய பெட்ரோலிய மந்திரி இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும் ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் பெற்று வருகிறோம். எனவே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை" என்றார்.
என்றாலும் அரபி கடல் வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும்போது ஆப்பிரிக்க நாடுகளை சுற்றிக்கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவேண்டியது இருக்கும். இதற்கு 12 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். அதோடு கச்சா எண்ணெய் விலையிலும் 40 சதவீதத்தை அதிகரிக்க செய்து விடும் என்கிறார்கள்.
இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் உடனடி பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அதற்கேற்ப ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது.






