search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு - பாராளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
    X

    மாநிலங்களவை

    பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு - பாராளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

    • அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அமளி நீடித்ததால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், காலை அமர்வின் ஒத்திவைப்புக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியது.

    சபை நடவடிக்கைகளை படமாக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல் விவகாரம் சட்ட நடவடிக்கை குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

    தி.மு.க.வின் திருச்சி சிவ, காங்கிரசின் சக்திசிங் கோஹில் ஆகியோர் காந்தியின் அறிக்கையை மாநிலங்களவையில் விவாதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆட்சேபணையை நிராகரிக்கும் தன்கரின் முடிவின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க முயன்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    இடைநீக்கம் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அவைத்தலைவர் தன்கர் மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியது.

    Next Story
    ×