search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் ராகுல் காந்தி: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
    X

    சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் ராகுல் காந்தி: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்

    • பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை.
    • வாக்குறுதி அளித்துவிட்டு மறைந்து விடுவதுதான், காங்கிரசின் பாணி.

    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர். அவர் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    கர்நாடக பா.ஜனதாவில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற லிங்காயத் தலைவர்கள் விலகி, காங்கிரசில் சேர்ந்து இருக்கலாம். அதற்காக அந்த சமூகத்தின் ஆதரவை பா.ஜனதா இழந்து விடும் என்று கருதக்கூடாது. பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை.

    மே 13-ந்தேதி, அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவதுடன், இதுவரை சமூகத்தில் பெற்ற மரியாதையையும் இழந்து விடுவார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, லிங்காயத்துகள் இந்துக்களே அல்ல என்று சித்தராமையா போன்றவர்கள் பிரசாரம் செய்தனர். அதன்மூலம் அந்த சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அது எடுபடவில்லை.

    கர்நாடக தேர்தலில் 74 புதுமுகங்களை நிறுத்த பா.ஜனதா மேலிடம் எடுத்த முடிவு, மிகவும் துணிச்சலான முடிவு. தலைமுறை மாற்றத்தை மாநில பா.ஜனதா தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கர்நாடக எதிர்காலத்துக்கான கட்சி, பா.ஜனதா ஆகும்.

    ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்றவை சுரண்டல் அரசியல் நடத்துகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார்.

    அவர் ஏதேனும் வினோதமான குற்றச்சாட்டுகளையும், சில வாக்குறுதிகளையும் கூறிவிட்டு, எங்கேயோ காணாமல் போய்விடுகிறார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இல்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்கிறார். அவரது கட்சி, பல்லாண்டு காலம் இந்தியாவை ஆண்டது என்பதையே அவர் மறந்து விடுகிறார். ஆட்சியில் இருக்கும்போது அதற்காக காங்கிரஸ் என்ன செய்தது?

    பிரதமர் மோடி அரசுதான், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறைய செய்துள்ளது. வாக்குறுதி அளித்துவிட்டு மறைந்து விடுவதுதான், காங்கிரசின் பாணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×