என் மலர்
இந்தியா

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வாட்டி வதைத்த வெப்பத்தை சற்றே தணித்த மழை
- ஜூன் மாதத்தில் இரு வாரம் கடந்தும் வட மாநிலங்களில் வெப்ப அலை வீசியது.
- டெல்லியின் பல இடங்களில் வெப்பநிலை 110 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதல் கோடை காலம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் தொடும். அதன்பின், ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிடும்.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரு வாரம் கடந்தும் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து வீசி வருகிறது.
குறிப்பாக, தலைநகர் டெல்லியின் பல இடங்களில் வெப்பநிலை 110 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்த வெப்பத்தால் மக்கள் கடும் உடல் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால் டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது
டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், உத்தர பிரதேசத்தின் காசியாபாத், குஜராத்தின் பவ நகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






