என் மலர்
இந்தியா

ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு?: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- விமானம் தரையிறங்குவதை ஏ.ஆர். ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.
- இந்த விவகாரம் உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாரணாசி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எம்.பி. தொகுதியான கேரளாவின் வயநாட்டில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள கமலா நேரு நினைவு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக வயநாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி சென்றார். ஆனால் வாரணாசி பாபத் விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் டெல்லி திரும்பினார். இது விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது.
ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் மாநில அரசு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த அஜய் ராய் இது குறித்து கூறுகையில், ராகுல் காந்தியின் விமானத்துக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டை வாரணாசி விமான நிலைய இயக்குனர் அர்யமா சன்யால் மறுத்து உள்ளார். விமான நிறுவனமே விமானம் தரையிறங்குவதை ரத்து செய்து விட்டதாக அர்யமா சன்யால் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வாரணாசி விமான நிலையம் தனது டுவிட்டர் தளத்தில், 'ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்குவதை ஏ.ஆர். ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது. இதை விமான நிலையத்துக்கு 13-ந்தேதி இரவு 9.16 மணிக்கு இ-மெயில் மூலம் தெரிவித்து இருந்தது. சம்பந்தப்பட்ட விமான நிறுவனமே விமான தரையிறக்கத்தை ரத்து செய்துள்ளதால் உங்கள் (காங்கிரசார்) அறிக்கையை சரி செய்து கொள்ளுங்கள்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும் இந்த விவகாரம் உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






