என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
    X

    பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலத்தின் நல்லாட்சி குறித்து விளக்க உரை ஆற்றுவார்கள்.

    புதுடெல்லி:

    10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட 5 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.

    இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் காலை தொடங்கி நாள் முழுவதும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 20 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் 18 துணை முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்), நிதிஷ் குமார் (பீகார்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), பூபேந்திர படேல் (குஜராத்), நயாப் சிங் ஷைனி (அரியானா), பிரமோத் சவாந்த் (கோவா), மோகன் யாதவ் (மத்தியபிரதேசம்), ரேகா குப்தா (டெல்லி), விஷ்ணு தியோ சாய் (சத்தீஸ்கர்), புஷ்கர் சிங் தாமினி (உத்தரகாண்ட்), மானிக் சகா (திரிபுரா), பீமா காண்டு (அருணாசல பிரதேசம்), கான்ராட் சங்மா (மேகாலயா), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), நீபியு ரியோ (நாகாலாந்து), மோகன் சரண் மாஜி (ஒடிசா) மற்றும் துணை முதல்-மந்திரிகளான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு எடுத்த முடிவுக்கும் பாராட்டு தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் நடைபெறும். பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலத்தின் நல்லாட்சி குறித்து விளக்க உரை ஆற்றுவார்கள்.

    மோடி அரசின் 3-வது பதவிகாலத்தில் முதலாமாண்டு நிறைவு, சர்வதேச யோகா தினத்தின் 10 ஆண்டு நிறைவு, அவசர நிலை அமல்படுத்தப்பட்ட 50-வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.



    Next Story
    ×