என் மலர்
இந்தியா

விண்வெளி நிலையத்திற்கு கேரட் அல்வாவும், ரசமும்..! சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் கலகல உரையாடல்
- விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
- 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.
இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
இந்த 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி இன்று வீடியோ காலில் கலந்துரையாடினார்.
இதன் வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில்,
குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். அங்கு அனைத்தும் சரியாக உள்ளதா? நீங்கள் நலமா?" என சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
மேலும் அவர்,"தாய்மண்ணை விட்டு தூரம் இருந்தாலும், இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். நாம் இருவரும் தற்போது பேசுகிறோம். ஆனால், 140 கோடி இந்தியர்களின் உணர்வு என்னுடன் இருக்கிறது.
எனது குரலில் இருக்கும் உற்சாகம், அனைத்து இந்தியர்களையும் பிரதிபலிக்கிறது. நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.
மேலும் அவர்," விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு கேரட் அல்வா எடுத்துச் சென்றீர்களா? என சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டதற்கு, " கேரட் அல்வா மட்டுமல்ல, பாசிப்பருப்பு அல்வாவும், ரசமும் எடுத்துச் சென்றதாக" தெரிவித்துள்ளார்.
"சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்கிறேன்" என்றார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபான்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டார்.
அப்போது, சுக்லா கூறுகையில்," விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது.
இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம்.
உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைப்படத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது" என்றார்.






