என் மலர்
இந்தியா
உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளும், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி நிகழ்த்தப்பட்டு சரியாக ஒரு மாதம் நிறைவு பெறும் நிலையில் காஷ்மீரில் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்று அங்கு ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்தில் புதிய சகாப்தம் என்ற பெயரில் சுமார் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கான விழா பத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரிய விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு மத்திய மந்திரிகள் நிதின் ஜெய்ராம் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் ஜிதேந்திரசிங், வி.சோ மண்ணா, ரவ்னீத்சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துணை முதல்-மந்திரி சுரிந்தர்குமார் சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் போக்குவரத்து (யு.எஸ்.பி.ஆர்.எல்.) திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, நாட்டின் முதல் கேபிள் ரெயில் பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி.ஆர்.எல். திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை-444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச் சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை- 44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாக்கப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி உயர் சிகிச்சை மருத்துவ மையத் துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரத மர்மோடி முதல் முறையாக காஷ்மீர் வந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவுக்கு செய்யப்பட்டு இருந்தன.
பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெற்ற கத்ரா அரங்கத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.








