என் மலர்
இந்தியா

உயிரோடு மீட்க முடியவில்லை என்றால், உடலையாவது மீட்டுத்தாருங்கள்: உமர் அப்துல்லாவிடம் கொந்தளித்த மக்கள்..!
- நேற்று முன்தினம் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.
- ஒரு கிராமத்தை வெள்ளம் மற்றும் மண் மூடியதால் பலர் சிக்கித்தவிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சசோதி என்ற கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் பேய்மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை இழுத்துச் சென்றது. மேலும், வீடுகளை மழை வெள்ளம், மண் மூடியுள்ளது.
இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் 70 முதல் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் கிராம மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர உமர் அப்துல்லா பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் மீட்புப்பணியை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே உமர் அப்துல்லாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது அருகில் இருந்த கூடாரத்திற்கு (Tent) வாருங்கள், உங்களுடைய குறைகளை கேட்கிறேன் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஆனால், மக்கள் செல்ல மறுத்துவிட்டார். இதனால் மக்களை சந்திக்காமல் உமர் அப்துல்லா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
மக்களுடைய கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய கோபம் உண்மையானது. கடந்த இரண்டு நாட்களாக மாயமாக தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடை என்ன? என விரும்புகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு வருவார்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
மாயமானவர்கள் உயிர்ப்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றால், உடல்களை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப்., ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மக்களை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மீட்க முடியாத இடங்களில், குறைந்தபட்சம் உடல்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






