search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பவன் கல்யாண்: தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு
    X

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பவன் கல்யாண்: தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு

    • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

    யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×