என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமை!- வேறு மதத்தவரை திருமணம் செய்த மகளுக்கு தர்ப்பணம் செய்த பெற்றோர்
    X

    இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமை!- வேறு மதத்தவரை திருமணம் செய்த மகளுக்கு 'தர்ப்பணம்' செய்த பெற்றோர்

    • மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவி திருமண வயதை எட்டியவர் என்பது தெரியவந்தது.

    நாகரிகம் வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    மாணவிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்ததால், அவர்களது காதலுக்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்து வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

    இதுபற்றி மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவி திருமண வயதை எட்டியவர் என்பது தெரியவந்தது.

    எனவே அவரது திருமணத்தில் தலையிட முடியாது என்று கூறி, மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். வேறு மதத்தவரை மகள் திருமணம் செய்தது தங்களுக்கு அவமானம் என்று கருதினர்.

    ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை இறந்து விட்டதாக கூறி அவருக்கு 'தர்ப்பணம்' செய்தனர். இதற்காக வீட்டில் இருந்த மாணவியின் படத்துக்கு மாலை அணிவித்து, இறந்தவர்களுக்கு செய்வது போல் பூஜைகளை செய்தனர்.

    இதுபற்றி மாணவியின் தாய் கூறுகையில், எங்கள் மகளின் செயல் எங்களுக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. இப்போது அவள் இல்லை என்று நினைத்து அவளது உடைகள், பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் எரித்துவிட்டோம் என்றார்.

    Next Story
    ×