என் மலர்
இந்தியா

காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகத்தை திருட்டு பொருள் குடோனாக மாற்றிய வாலிபர்
- கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
- திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷொரனூர் கணேஷகிரி பகுதயில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு பொருட்கள் திருட்டு போகின. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பள்ளியில் லேட்டாப்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியது கோட்டயம் மாவட்டம் வைக்கம் வடக்குமூர் பகுதியை சேர்ந்த ஷிஜாஸ்(வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷொரனூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. பாலக்காடு மாவட்ட பகுதியில் மட்டும் அவர் 16-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர் லேட்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
திருடிய பொருட்களை காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் பதுக்கி வைத்தபடி இருந்திருக்கிறார். இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சென்ற போலீசார் பார்வையிட்டனர். அப்போது அங்கு சாக்குமூட்டைகளில் லேட்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் இருந்தன. ஷிஜாஸ் திருடி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் போலீசார் செய்தனர்.
அந்த தொழிற்சங்க அலுவலகத்தை சமீபகாலமாக சங்கத்தின் நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். அதனை நோட்டமிட்ட ஷிஜாஸ், அந்த அலுவலகத்தை திருட்டு பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக அந்த அலுவலகத்தின் கதவில் ஏற்கனவே போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து விட்டு, புதிய பூட்டை வாங்கி போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.
தொழிற்சங்க அலுவலகத்தை நிர்வாகிகள் வெகு நாட்களாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தது ஷிஜாசுக்கு மிகவும் வசதியாக இருந்துள்ளது. அவர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருவது ஐ.என்.டியூ.சி. நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.






