search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இடைக்கால பட்ஜெட்: எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்
    X

    இடைக்கால பட்ஜெட்: எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்

    • பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
    • பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

    பட்ஜெட்டை கவனமாகக் கேட்டேன். இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இது அவர்களின் அன்றாடப் பணிகளுக்கான பட்ஜெட். 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளின் விவரத்தை கொடுக்கவில்லை.

    எத்தனை வாக்குறுதிகளை அளித்தார்கள், எத்தனை நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். ஒப்பிட்டு அறிக்கை கொடுக்கவேண்டும்.

    2014-க்கு பிறகுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடு ஜனநாயகத்தைப் பார்க்கிறது என்றும் நினைக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

    கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறிய அனைத்து வாக்குறுதிகளும் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்பி சுஷில் குமார் ரிங்கு:

    இளைஞர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் தங்களது மேம்பாடு பற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

    காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா ஷிண்டே:

    மத்திய அரசு இன்னும் மறுப்பு நிலையில் உள்ளது. பிரச்சனைகளை ஏற்க தயாராக இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சாமானிய மக்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் குறித்து எதுவும் இல்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையான வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அரசின் தகவல் கூறுகிறது.

    தி.மு.க. எம்.பி. சிவா:

    அடுத்த முழு பட்ஜெட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நாங்கள் வந்து தாக்கல் செய்வோம். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வருகிற தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×