என் மலர்
இந்தியா

பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக போராடி உயிர்நீத்த இஸ்லாமிய தொழிலாளி - உமர் அப்துல்லா நேரில் அஞ்சலி
- சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
- 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தன் கண்முன்னே அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பயங்கரவாதிகள் சையது அடிலை துப்பாக்கி சூட்டுக்கு இரையாக்கினர். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.
அவரது மறைவுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சையதின் துணிச்சலை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். சையது உடைய இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய வார், அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.
பிஸ்மில்லா பிஸ்மில்லா
இந்த தாக்குதலில் கண்முன் கணவரை இழந்த பல்லவி என்ற கர்நாடக பெண்மணி கூறுகையில், "என் கணவரை கொன்றவர்களிடமிருந்து நாங்கள் தப்பியபோது, 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
என் சகோதரர்கள் என்றே அவர்களை சொல்வேன். அவர்கள்தான் என்னையும் என் மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஒருவர் என் மகனை அரவணைத்து ஆறுதல் சொல்ல, மற்றவர்கள் என்னை தேற்றினர். அவர்களுக்கும் எங்கள் ஓட்டுநர் அப்ரீஸூக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.






