என் மலர்
இந்தியா

கேரளாவுக்கு மட்டும் பெயர் மாற்றம்.. ஆனால் மேற்கு வங்கத்துக்கு ஓரவஞ்சனை - மம்தா ஆதங்கம்
- கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
- ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.
நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.
பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.
ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.






