என் மலர்
இந்தியா

மும்பை மாநகராட்சித் தேர்தல் - 137 இடங்களை உறுதிசெய்த பாஜக... சிவசேனா?
- அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
- சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 இடங்களை கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 90 இடங்களை ஒதுக்கியுள்ளது பாஜக.
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்கீழ் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், பாஜக தலைவர் அமித் சதம் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது. இதற்கு சிவசேனா உடன்படாத நிலையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்போது எண்ணிக்கை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க தற்போது 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.






