என் மலர்
இந்தியா

உயிரிழந்த மகனின் அரசு வேலை, Gratuity பணத்திற்காக மருமகளை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மாமியார்
- கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
- புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் இறந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்திற்காக மருமகளைக் மாமியார் கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர், தனது மருமகள் ரூபாலியை (35) இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
லதாபாயின் மகன் விலாஸ் ரெயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
மேலும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரெயிலவே வேலைக்காகவும் ரூபாலி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
மேலும், மருமகளுக்குக் கிடைத்த பணத்தை மாமியார் லதாபாய் கேட்டுள்ளார்.
இதற்கு மருமகள் மறுக்கவே, இதனால் ஆத்திரமடைந்த லதாபாய், தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
இருவரும் சேர்ந்து புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
அதன் பிறகு, எதுவும் தெரியாதது போல மருமகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் லதாபாய் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லதாபாய் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாமியார் லதாபாய் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






